ஆரோக்கியம் குறிப்புகள்

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.552842_460078960727348_717260339_n

முதல் மாதம்
கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.

இரண்டாம் மாதம்
அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.

மூன்றாம் மாதம்
தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.

4ம் மாதம்

நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.

5ம் மாதம்
ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.

6ம் மாதம்
வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.

7ம் மாதம்
ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.

8ம் மாதம்
பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.

9ம் மாதம்
ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.

10ம் மாதம்
அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.

12ம் மாதம்
ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.

15வது மாதம்

தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.

இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.

1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்:-

பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

0-4 மாதம் வரை

நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை

இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

8-10 மாதம் வரை

இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

10-12 மாதம்

இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்..!
374490 640179192671066 2085217069 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button