மருத்துவ குறிப்பு

லேடீஸ் ஹாஸ்டல் A to Z

சொந்த ஊரைவிட்டு நகரங்களுக்கு மேற்படிப்பு, வேலை காரணமாகச் செல்லும் பெண்களின் முக்கியப் பிரச்னை, விடுதி. கிடைத்த லேடீஸ் ஹாஸ்டலில் தங்குவதை விட சில விஷயங்களை நன்கு ஆராய்ந்துவிட்டு சேருவது நல்லது.

இடம்

பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன்… என டிரான்ஸ்போர்ட் வசதிகள் இருக்கும் இடத்தில் அல்லது அருகாமையில் ஹாஸ்டல் இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். ஒதுக்குப்புறமான அல்லது மக்கள் நடமாட்டம் குறைவான பகுதி அல்லது டாஸ்மாக் அருகில் என்றால் தவிர்த்து விடுங்கள். ஹாஸ்டல் செக்யூரிட்டி எப்படி இருக்கிறது என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆராயுங்கள்.

உடன் தங்குபவர்கள்

ரூம் மேட் ஆக இருப்பவர்களின் பர்சனல் குறித்து தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், உங்கள் சம்பளமும் அவர்களது வருவாயும் ஏறக்குறைய சமமாக இருப்பது நல்லது. உங்களைவிட இரண்டு மடங்கு வருமானம் வாங்கும் பெண்களோடு தங்கினால் அவர்களது ஆடம்பர செலவுகளுக்கு நீங்களும் அடிமையாவீர்கள். தவிர உங்களை அவர்கள் தாழ்வாகப் பார்க்கவும் வாய்ப்புள்ளது. உங்கள் ஊர்க்காரர் அல்லது தெரிந்தவர் ஒரு சிலராவது இருக்கும் விடுதியைத் தேர்ந்தெடுத்தால் அனுசரணையாக இருக்கும்.

உள்கட்டமைப்பு

தங்கவிருக்கும் விடுதியில் தனி ஆபீஸ் ரூம் இருக்கிறதா, குளியலறை, துணி துவைக்கும் இடம் போன்றவை வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அதேபோல, சார்ஜர் போட ப்ளக் பாயின்ட் மற்றும் ஜன்னல் இதெல்லாம் கொஞ்சம் பக்கம் இருக்கும்படி படுக்கையை திருப்பிப்போட்டுக் கொள்ளுங்கள்.

விதிமுறைகள்

இன் டைம், அவுட் டைம் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் எழுத வேண்டும் என்ற நடைமுறை உட்பட, விடுதியின் நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள். அவையெல்லாம் உங்களின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே. நாளை அது ஏதாவது ஒரு விதத்தில் உங்களுக்கு கைகொடுக்கும், காப்பாற்றும்.

மருத்துவம்

எப்போதும் ஒரு மெடிக்கல் கிட் கையோடு இருக்கட்டும். காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் உங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட அலர்ஜிக்கான மாத்திரைகள் என அனைத்தும் அதில் எப்போதும்இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

மவுனமே பாடலாக

உங்கள் சொத்து, சுகம், சோகம், வங்கிக் கதை, வந்த கதை, போன கதை என எல்லாவற்றையும் ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். பலதரப்பட்டவர்களும் தங்கியிருக்கும் இடத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் நீங்கள் முழுமையாக அறிந்திருக்க மாட்டீர்கள். அதேபோல, யாரிடமும் எடுத்தவுடன் நெருக்கமாகப் பழகவேண்டாம். கிசுகிசுக்களைத் தவிருங்கள்.

பணம்

உங்கள் பர்ஸில் பணம் வைத்திருப்பதோடு, சூட்கேஸ், பெட்டுக்குக் கீழே என வெவ்வேறு இடங்களில் சிறு தொகையைப் பிரித்து வைத்திருங்கள். திடீரென பர்ஸ் தொலைந்துவிட்டால்கூட `பேக் அப்’புக்கு இது உதவும்.

j4YyAzL

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button