ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

கிரீன் டீ எடை குறைக்குமா ?

p38b

உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் கிரீன் டீ சாப்பிடுகிறீர்களா என்று
கேட்கிறார்க ள். ஸ்டார் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மால்கள் முதல் சைக்கிளில்
டீ கேன் வைத்து விற்பவர் வரை எங்கும் கிரீன் டீ.  எடை குறைய கிரீன் டீ
குடியுங்கள் என விளம்பரங்கள். கிரீன் டீ உண்மையாகவே உடலுக்கு நல்லதா?
எடையைக் குறைக்கிறதா? கிரீன் டீயில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?

உடலுக்கு ஆரோக்கியம்

கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு (Flavonoid), கேட்டச்சின்
(Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த
ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல்
பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க,  தினமும் ஒரு கப்
கிரீன் டீ அருந்தலாம்.

கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது.
இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு
இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு
கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி
நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும்
பார்கின்சன் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.
பற்களில் ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மியூட்டன்ஸ்
(Streptococcos mutans) என்ற பாக்டீரியா வளர்ந்தால், பற்கள்
பாதிக்கப்பட்டு, சொத்தையாக மாறும் அபாயம் உண்டு. கிரீன் டீ குடித்தால்,
அதில் இருக்கும் கேட்டசின், இந்த வகை பாக்டீரியாக்களை அழித்து, பற்களைக்
காக்கும்.

கிரீன் டீ இன்சுலின் செயல்பாட்டை சிறிதளவு
அதிகரிக்கும். எனவே, சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ குடிப்பது, சர்க்கரை
நோயாளிகளுக்கு நல்லது. கிரீன் டீயைத் தொடர்ந்து குடிப்பவர்
களுக்கு, டைப்-2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.  சர்க்கரை
சேர்க்காமல் கிரீன் டீ அருந்தினால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட
கொழுப்புகள் கரையும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு
ஏற்றது.

இதயத்துக்குச் செல்லும் வால்வுகளில் கொழுப்புக்
கட்டிகள் சேர்வதைத் தடுக்கும் வல்லமை பெற்றது கிரீன் டீ. இதய நோய்கள்
அண்டாமல் இருப்பதற்கும், பக்கவாதம் வராமல் இருக்கவும் கிரீன் டீ
அருந்தலாம். கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன.  இது உடல் மற்றும் மனச்
சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ
அருந்தலாம்.

கிரீன் டீ  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில்
தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட்
புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.

கிரீன் டீ யாருக்கு ஏற்றது?

மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோய்,
சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள்
கிரீன் டீ சாப்பிடலாம்.
அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.

கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்?

பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.

கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, கொதிக்கவைத்து
வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. உடல்
எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, வெல்லம்
அல்லது தேன் போன்றவற்றைச் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.

கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள்
ஏற்படுவது போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது
நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button