அழகு குறிப்புகள்

கூந்தல் உதிர்வுக்கு காரணம் இவைதான்!…

முடி கொட்டுவதற்கு முக்கியமான காரணம் போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கம் மற்றும் நமது பழக்கவழக்கங்களும் தான். இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.

இன்றைய உணவுப்பழக்கமே கூந்தல் உதிர்வுக்கு காரணம்

பள்ளிக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தலைமுடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது.

உடல் உஷ்ணத்தால் முடிஉதிர்வு மட்டுமல்லாமல், முடி வறட்சி, பொடுகு, புண்கள், வியர்வைத் திட்டுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பெண்கள் தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்குள் தலைமுடியைப் பின்னிக்கொண்டு ஈரத்துடன் இருப்பதும் முடி உதிர்வுக்குக் காரணமாகிறது. நாம் பயன்படுத்தும் சீப்புக்கும் இதில் பெரும்பங்கு உண்டு.

hair2 2

பொதுவாக பிளாஸ்டிக் சீப்பையே பெரும்பாலானோர்

பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் சீப்பால் தலையில் அழுத்தம் கொடுக்கும்போது மயிர்க்கால்கள் வறண்டு, உஷ்ணமாகி முடி உதிர்வு ஏற்படுகிறது.

மன உளைச்சல், மனச்சோர்வு, அதிக நேரம் கணினியில் வேலைசெய்வதால் உண்டாகும் வெப்பம் போன்றவையும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.’

இன்றைக்குத் தரமில்லாத உணவுகளும், ரசாயன நச்சுகள் கலந்த உணவுகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

அந்த உணவுகளில் போதுமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சத்துகள் இல்லாததும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது.

இதுதவிர, தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு மற்றும் கருப்பை பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளும் இதற்குக் காரணமாகிறது.

ஆனாலும் முடி உதிர்வைத் தடுக்க எளிய வழிகள் உள்ளன.

ரசாயனக் கலப்பில்லாத உணவுகள் உட்கொள்வது உடலில் சத்துகள் பற்றாக்குறையைச் சீராக்குவதுடன் ஹார்மோன் சுரப்பையும் சீராக்கும்.

உணவில் இந்துப்பு பயன்படுத்துவதால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தைராய்டு குறைபாடுகள் சீராகும்.

துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளை வாரத்துக்கு நான்கு முறை உட்கொண்டால் கருப்பை ஆரோக்கியமடைவதுடன், முடி உதிர்வும் குறையும்.

யோகா, தியானம் போன்றவை மனஅழுத்தத்தைக் குறைத்து, உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். தினந்தோறும் பச்சைக் காய்கறிகள், பழங்களைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்ப்பது, வாரம் ஒருமுறை செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பது அவசியம்.

காலையில் இளஞ்சூடான நீரில் குளிப்பதால் உடல் உஷ்ணம் கட்டுப்படுவதுடன் மயிர்க்கால்களுக்குத் தேவையான சத்துகளும் எளிதாகக் கிடைக்கும்.

இதனால் முடி உதிர்வையும் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான அமினோ அமிலம் உற்பத்தியாகி முடி உதிர்தல் குறையும்.

தலைமுடிக்கு ஷாம்பு, கண்டிஷனர் போடுவதற்குப் பதிலாக கற்றாழை, செம்பருத்தி, நெல்லிக்காய் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த சீயக்காயைப் பயன்படுத்துவது நல்லது.

தலைக்கு ரசாயனங்கள் நிறைந்த வர்ணங்கள் பூசுவதைத் தவிர்க்கவேண்டும். `ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்’ எனப்படும் முடி அமைப்பை மாற்றும் பல நவீன சிகிச்சைகள் முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது என்பதால், அவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

எண்ணெய்ப் பதார்த்தங்களை உண்ண விரும்புபவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணெயில் தயாரித்த உணவுகளை உண்பது சிறந்தது. கடைகளில் கிடைக்கும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்.

இத்தகைய பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதுடன் உடல் அழகை அதிகரிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button