Other News

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பும் இந்தியாவுக்கு விற்பனை!

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.

29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இலங்கை மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பம். எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாது மக்கள் வீதிகளுக்கு குறுக்காக அமர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் வேளையில், இலங்கையில் பாதுகாப்பு கட்டமைப்புக்கு எனக் கூறி, இலங்கையின் வான் பரப்பு இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது.

இலங்கையின் கடல், நிலமும் சீனாவுக்கு வழங்கப்பட்டது. துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்கினர். எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவுக்கு வழங்கினர். இவ்வாறான நிலைமையில் இலங்கையின் வான் பரப்பும் 29 மில்லியன் டொலர்களுக்கு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு ட்ரோன் விமானங்களை பறக்கவிடுவதற்காக இலங்கை வான் பரப்பு விற்பனை செய்யப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பமாக இதனை நான் பார்க்கின்றேன். இந்தியாவுடன் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதில் ஒன்று இலங்கை மக்களின் உயிரியல் அடையாளங்களை அதாவது கைவிரல் அடையாளங்களை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் உரிமையை வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்துடன் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை தொழிற்நுட்ப அமைச்சுக்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மூன்று ட்ரோன்கள் மற்றும் நான்காயிரம் தொன் எடை கொண்ட மிதக்கும் மிதவை படகு ஆகியவற்றை இலங்கையில் பயன்படுத்த இந்திய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சம்பந்தமான முழு பாதுகாப்பு இந்தியாவிற்கு விற்கப்பட்டுள்ளது. இது மிகவும் பயங்கரமானது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வந்த வீரர் இலங்கை கடற் பாதுகாப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்திய கடற் கண்காணிப்பு அமைப்புக்கு ஹம்பாந்தோட்டையில் ஒரு மையத்தை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். சீனாவுக்கு துறைமுகம், இந்தியாவுக்கு கடல், மிகப் பெரிய போரை ஏற்படுத்தக் கூடியது.

இது மிகப் பெரிய முட்டாள்தனமான செயல். டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான பொறுப்பும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை ஆவணங்கள் அனைத்தும் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு செல்லும் முன்னர் தயார் செய்யப்பட்டவை என்பது தெளிவாகியுள்ளது எனவும் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button