ஆரோக்கிய உணவு

உடலை குளிர்ச்சியாக்கும் சப்ஜா

சப்ஜாதிருநீற்றுப்பச்சை என்பது எல்லோரும் அறிந்த செடி வகை. இது துளசி இனத்தோடு சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா.

திருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும் மூலிகை பிரபலம். திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம்.

சப்ஜா இலைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும். அதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம். இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும். இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.

சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால், முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது.

சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும். காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.

டீன்ஏஜில் பெரும்பாலான பெண்கள் முகப்பருவால் அவதிப்படு கிறார்கள். அவர்கள் இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். தழும்புகளும் மறையும்.

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர் களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.

ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.

மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.

கோடை காலத்தில் வட மாநிலங் களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு.

கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button