சரும பராமரிப்பு

வேனிட்டி பாக்ஸ்: பாடி வாஷ்

முந்தைய காலங்களில் தலை முதல் கால் வரை சோப் உபயோகித்துக் குளித்த அனுபவம் பலருக்கும் இருக்கும். இன்று போல அந்த நாட்களில் தலைமுடிக்கான ஷாம்புவோ, முகத்துக்கான ஃபேஸ் வாஷோ கிடையாது. இப்போது தலைக்கு ஒன்று, முகத்துக்கு ஒன்று, உடம்புக்கு ஒன்று என மூன்று விதமான பொருட்களை உபயோகிக்கிறோம்.கடந்த இதழில் முகத்தை மட்டும் சுத்தப்படுத்துகிற ஃபேஸ் வாஷ் பற்றிப் பார்த்தோம். அதே போன்று உடலை சுத்தப்படுத்த பாடி வாஷ் என்றும் இருக்கிறது. பாடி வாஷின் பயன்கள் என்ன, யாருக்கு என்ன பாடி வாஷ், எப்படித் தேர்ந்தெடுப்பது… எல்லா தகவல்களையும் விளக்குகிறார் நேச்சுரல்ஸ் வீணா குமாரவேல்.

சோப் உபயோகித்துக் கொண்டிருந்த பலரும் இன்று பாடி வாஷுக்கு மாற ஆரம்பித்திருக்கிறார்கள். சோப்பை விட பாடி வாஷ் உபயோகிப்பது வசதியானதாகவும் இருக்கிறது. வீட்டிலுள்ள அனைவரும் தனித்தனி சோப் உபயோகிக்க முடியாத போது, ஒரே சோப்பை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அது ஆரோக்கியமானதல்ல. பயணங்களின் போது சோப்பை கொண்டு செல்வதும், உபயோகித்த, ஈர நைப்புள்ள சோப்பை திரும்ப எடுத்து வருவதும் சிரமமானது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாகிறது பாடி வாஷ். ஷாம்பு வடிவில் இருக்கும் இதை உள்ளங்கையில் சிறிது எடுத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளிக்கலாம்.

எங்கேயும் எடுத்துச் செல்வதும் எளிது. இரண்டு வகையான பாடி வாஷ் இருக்கின்றன. ஒன்று ஷவர் ஜெல், இன்னொன்று மாயிச்சரைசிங் பாடி வாஷ்.ஷவர் ஜெல்கிட்டத்தட்ட ஷாம்புவை போன்ற தோற்றத்தில், கலர் கலராக இருப்பவை இவை. தண்ணீர் மற்றும் சோடியம் லாரத் சல்பேட் கலவையான இவற்றின் பிரதான வேலை சுத்தப்படுத்துவது. இவற்றில் உள்ள Surfactant சருமத்தில் படிந்த எண்ணெய் பசையை நீக்கக்கூடியது. இவற்றில் சருமம் வறண்டு போகாமலிருக்க கண்டி ஷனிங் பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கும்.

மாயிச்சரைசிங் பாடி வாஷ்

இவை லோஷன் வடிவில் சற்றே கெட்டியாக இருக்கும். கிரீம் ஆயில், டீப் மாயிச்சர், நரிஷிங் எனப் பல்வேறு பெயர்களில் கிடைக்கும். இவற்றிலும் தண்ணீர் மற்றும் சோடியம் லாரத் சல்பேட்டின் கலவை இருக்கும். கூடவே சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி போன்றவையும் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த வகை பாடி வாஷ் பயன்படுத்திக் குளித்த பிறகும், உடலில் ஒருவித வழுவழுப்புத் தன்மை இருக்கும். ஷவர் ஜெல் உபயோகிக்கும் போது உண்டாகும் வறட்சி, இதில் இருக்காது.

சீக்கிரமே முதுமைக்கான அடையாளங்கள் தென்படுகிற சருமத்துக்கும் இந்த வகை மாயிச்சரைசிங் பாடி வாஷ் மிகப் பொருத்தமானது.சருமத்தில் உள்ள அழுக்கு, தூசுகளை அகற்ற கிளென்சிங் உபயோகிக்கிறோம். சில வகை கிளென்சர்கள் சருமத்தின் இயல்பான எண்ணெய் பசையை நீக்கி விடும். அதனால் சருமம் வறண்டு போகாமலிருக்க மாயிச்சரைசர் உபயோகிப்போம். மாயிச்சரைசர் என்பது குளித்த உடன் சருமத்தில் ஈரப்பதம் இருக்கும்போதே தடவப்பட வேண்டியது. இப்படி இரண்டு வெவ்வேறு பொருட்கள் செய்கிற வேலையை மாயிச்சரைசிங் பாடி வாஷ் செய்து விடும்.

சில வகை மாயிச்சரைசிங் பாடி வாஷ்களில் சேர்க்கப்படுகிற வைட்டமின் ஈ, சருமத்துக்குக் கூடுதல் ஊட்டம் அளிக்கக்கூடியவை.சென்சிட்டிவ் சருமம் உள்ள சிலருக்கு பாடி வாஷ் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். அதில் சேர்க்கப்படுகிற நறுமணங்களும், ப்ரிசர்வேட்டிவ்களும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவர்கள் பாடி வாஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம் அல்லது இப்போது வாசனையோ, ப்ரிசர்வேட்டிவோ இல்லாமல் வருகிற ஆர்கானிக் பாடி வாஷ் உபயோகிக்கலாம். பிரச்னை உள்ள சருமங்களுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆன்ட்டி செப்டிக் பாடி வாஷை பயன்படுத்தலாம்.

கவனிக்கப்பட வேண்டியவை…

நீங்கள் தேர்ந்தெடுக்கிற மாயிச்சரைசிங் பாடி வாஷில் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் உண்மையிலேயே moisture எனப்படுகிற ஈரப்பதம் இருப்பதாக அர்த்தம்.மினரல் ஆயில், கிளிசரின், பெட் ேராலாட்டம், சோயாபீன் ஆயில், ஜோஜோபா ஆயில், ஆல்மண்ட் ஆயில், ஆலோவேரா, ஆலிவ் ஆயில், ஷியா பட்டர். குளிக்கும் போது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசை இழக்கப்படுவதை சோயா பீன் போன்றவை ஈடுகட்டும். பெட்ரோலாட்டம் போன்றவை சருமத்தின் வழுவழுப்புத்தன்மையை தக்க வைக்கும். கிளிசரின், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும்.

மாயிச்சரைசிங் பாடி வாஷ் எப்படி வேலை செய்கிறது?

மாயிச்சரைசிங் கிரீம் என்பது 50 சதவிகிதம் தண்ணீர் மற்றும் 50 சதவிகிதம் எண்ணெயின் கலவை. ஆனால், மாயிச்சரைசிங் பாடி வாஷில் தண்ணீரின் அளவு கூடுதலாக இருக்கும்படி தயாரிக்கப்படும். சருமத்தில் ஈரப்பதமும் இருக்க வேண்டும். அதே நேரம் எண்ணெய் தடவினாற் போன்ற பிசுபிசுப்புத் தன்மையும் கூடாது என்பதற்கேற்பத் தயாரிக்கப்படுவது.

சோப்பா..? பாடி வாஷா? ஷவர் ஜெல்லா?

பெரும்பாலான பார் சோப்புகளில் மிகக் குறைந்த அளவே மாயிச்சரைசரும், பி.ஹெச் மிக அதிக அளவும் இருப்பதால் குளித்து முடித்ததும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிற அவசியமான கொழுப்பு மற்றும் புரதங்கள் நீக்கப்படும். அதன் விளைவாக சருமம் இழுப்பது மாதிரியும், வறண்டது போலவும் தோன்றும். எனவே, குளிர் காலங்களில் பாடி வாஷையும், வெயில் நாட்களில் ஷவர் ஜெல்லையும் கூடப் பயன்படுத்தலாம்.
ld4260

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button