ஆரோக்கியம்

அமைதி தரும் ஆழ்நிலை தியானம்!…

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

amaithi

மன அமைதி தரும் ஆழ்நிலை தியானம்

ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும்.

மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button