ஆரோக்கியம்மருத்துவ குறிப்பு

பூவரசு இயற்கை மருத்துவமும், கருப்பையைக் காக்கும்

பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள்கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக்கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம்கொண்டவை.

ertyuikol
இலை:

சிறுசிறு விஷ வண்டுகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும் இயல்பு இதற்கு உண்டு. இதனால், கிராமப்புறங்களில், வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு, பூவரசு இலையில், பசுவின் சாணத்தை வைத்து, அதன் மேல் பூசணிப் பூ அல்லது பூவரசு மரத்தின் பூவினை வைப்பார்கள். பனை ஓலைக் கொழுக்கட்டைக்கு அடுத்தப்படியாக கிராமங்களில் பூவரசு இலையில் கொழுக்கட்டை செய்வதும் இன்று வரை வழக்கில் உள்ளது. எவ்வளவு சூடு செய்தாலும் இதன் நிறம் கொழுக்கட்டையில் கலக்காது. மேலும், பூவரசு இலையில் இருக்கிற குளோரோஃபில் என்கிற பசுங்கனிகம் உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்புத்தன்மையையும் கூடுதலாக்கும். இதில் நிறைந்திருக்கிற லியூப்னோன், லியூப்யோல், அல்கேன்ஸ் போன்ற வேதிப் பொருட்கள் தீமை செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மைகொண்டவை. இதில் உள்ள பாப்யுல் மீத்தேன் மற்றும் ஹெர்பசெடின் போன்ற வேதிப் பொருட்கள் கருப்பையைப் பலப்படுத்தும் டானிக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வீக்கமும் வலியும் நீங்க…

பூவரசு இலையை நன்கு இடித்துத் துவையலாக மசித்து, பின் சூடுசெய்து துணியில் பொட்டலமாகக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும். உடலில் அடிபட்டு வீக்கமான இடங்களில் இந்தப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுக்க, வீக்கமும் வலியும் ஒருசேரக் குறையும். மூட்டு வலியினால் நீர்க்கோத்துக் காணப்படும் வீக்கமும் சரியாகும். காய்ந்த பழுப்பு இலையுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து சரும நோய்களுக்கு வெளிப் பூச்சாகப் பூசலாம். பழுப்பு இலையைத் தீயில் கருக்கி சாம்பலாக்கி, அதனைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்தால், சரும அரிப்பு, கரப்பான் உள்ளிட்டவை குணமாகும்.

பட்டை:

பூவரசு மரக் கட்டைகளால் செய்யப்பட்ட கட்டிலைப் பயன்படுத்துவதால், உடலின் உஷ்ணம் குறையும். பூவரசுப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி நீரில் இட்டுக் காய்ச்சி தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் தேங்காய் எண்ணெய் கலந்து மீண்டும் காய்ச்சி எடுத்துக்கொண்டு சரும வெடிப்பு மற்றும் கரும்படை உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால், விரைவில் நல்ல குணமாகும். பட்டையை எரித்துச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயுடன் கலந்தும் சரும நோய்க்குப் பயன்படுத்தலாம். உடலில் உள்ள வெண் புள்ளிகள் மறைவதற்கு, பூவரசு மரத்தின் உள் பட்டையை நீர் விடாமல் இடித்துச் சாறெடுத்து தடவிவர வேண்டும். சரும வெடிப்புப் பிரச்னைக்கும் இது நல் மருந்து. வயிற்றுக் கழிச்சலுக்கு பட்டைக் கஷாயம் கை கொடுக்கும்.

காய்:

இதன் காயை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து சிரங்கு, கால் சேற்றுப்புண் இவற்றுக்கு வெளிப்புறமாகப் பூச நல்ல குணம் கிட்டும். காயை இடித்துச் சாறு எடுத்து, சருமத்தில் தடவிவந்தால் தேமல் மறையும். தலை முடி மற்றும் மீசை, புருவத்தில் வரும் ‘புழு வெட்டு’ப் பிரச்னைக்குப் பூவரசுக் காயை இடித்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம். பூவரசுக் காயில் உள்ள தெஸ்பெசின் என்ற வேதிப்பொருளுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகம். மேலும் வைரஸ் தொற்றைத் தடுக்கும் தன்மையும் இந்தக் காய்க்கு உண்டு.

பூ:

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்தெடுத்து சருமத்தில் பூசிவர, தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளக்கும். பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு, மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவிவர விரைவில் குணமாகும். கிராமப்புறங்களில் கருப்பைப் பிணிகளைச் சரிப்படுத்தவும் கரு உற்பத்திக்கும் (குழந்தைப் பேற்றுக்கும்) இதன் பூவைக் காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள். பூவரசு பூ – இலையை நன்றாக அரைத்து, மோரில் கலந்து பெண்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுப்பார்கள். காரணம், பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருட்கள் (தெஸ்பிசின், லூப்பினால், கிளைக்கோசைட்ஸ்) கருப்பையைப் பலப்படுத்தி, கரு முட்டை உற்பத்தியைத் தூண்டும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான ‘கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button