தூதுவளை சூப்

தேவையானவை:

தூதுவளை (வேருடன்) – தேவையான அளவு, பட்டை -2, கிராம்பு – 4, அன்னாசிப்பூ – 4, சோம்பு , சீரகம் – சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு, தக்காளி – 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், கடுகு, மஞ்சள் தூள், உப்பு – தேவைக்கு ஏற்ப.

செய்முறை:

தூதுவளையை வேருடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது, தக்காளியைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் பொடித்துவைத்த பொடி, இஞ்சி பூண்டு கலவை இரண்டு டீஸ்பூன் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். கொதிவந்ததும், தூதுவளை சாற்றைச் சேர்க்க வேண்டும். இது, நன்கு கொதித்ததும் ஏற்கெனவே வதக்கிவைத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும். கடைசியில், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால், சூப் ரெடி.
பலன்கள்: மிளகுத் தூள் சேர்த்துத் தூதுவளை சூப் சாப்பிடலாம். சளி, கோழை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்குத் தூதுவளை சூப் நல்ல மருந்து. நெஞ்சுச்சளி, குடல்சளி இரண்டையும் தூதுவளை அகற்றும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு தூதுவளை சூப் குடிக்கலாம்.

Leave a Reply